கடந்த ஒரு வாரமாகத் தமிழ்நாடு முழுவதும் பேசிக் கொண்டிருந்த…இன்னும் பேசிக் கொண்டிருக்கும்… அந்தப் பொல்லா…ச் சீசீ….விசயம் அல்ல இது…
இது வேறு..
கடந்த 13.03.2019 அன்று பொள்ளாச்சி அருகில் உள்ள கெடிமேடு PAP பாசனக் கால்வாயில் ஒரு கார் கவிழ்ந்து அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்த கொடூர சம்பவத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது.
அது சம்பந்தப்பட்ட விசயம்தான் இது.
இருளில் நிலைதடுமாறிக் கார் கால்வாயில் கவிழ்ந்து விட்டது…சரி. அதை மேலே கொண்டு வர வேண்டுமே… அதற்கு யாராவது கீழே இறங்கிக் கயிற்றைக் காரில் கட்டினால்தான் உண்டு. ஆனால், அந்தத் தண்ணிரில் இறங்குவது மிகவும் ஆபத்தான விசயம்..
அந்தக் கால்வாய் சுமார் பதினொரு அடி ஆழமும், இருபதடிக்கு மேல் அகலமும், வினாடிக்குச் சுமார் 1000 கன அடி நீருக்கு மேல் வேகமாகச் செல்லக்கூடியதும் ஆகும். யானை இறங்கினால் கூட அடித்துச் சென்று விடும். அதில் ஒரு மனிதன் எப்படி இறங்கி, அந்த வேகத்தைச் சமாளித்துக் காரைக் கயிற்றால் கட்டுவது ?
ஆனால், அதிலும் இறங்கினார் பெயர் தெரியாத ஒரு தீயணைப்புப் படை வீரர்.
தன் இடுப்பில் பலத்த ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டு, கிரேன் உதவியுடன், மிகுந்த வேகத்துடன் பாயும் அந்த வெள்ள நீரில் இறங்கினார் அவர்.
அதுவும் எப்போது ? சரியாகப் பொழுது புலராமல், சற்றே இருட்டாக இருந்த அதிகாலை நேரத்தில், கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்.
பாயும் வெள்ள நீரில் மூழ்கி, உயிரைப் பணயம் வைத்து, அந்தக் காரில் கயிற்றைக் கட்டி விடுகிறார்…
இதற்குப் பின்னர் நடந்த, அவர் நடந்து கொண்ட, விசயம்தான் மெய் சிலிர்க்க வைத்தது.
காரில் கயிற்றைக் கட்டிய பிறகுதான் அவர் உணர்கிறார், காரிலிருந்து ஒரு பெண்ணின் உடல் காரை விட்டு வெளியே வந்து விட்டது என்பதை…
அதை, நீரில் அடித்துச் செல்லாத வண்ணம் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறார்.. ஒருவர் அந்த நீரின் வேகத்தைச் சமாளித்து நிற்பதே மிகவும் கடினம்…இதில் இன்னொரு உயரற்ற உடலையும் நீர் இழுத்துச் செல்லாமல் தடுத்து நிறுத்துவது எவ்வளவு சிரமமான விசயம்..?
இதோடு முடிந்து விடவில்லை அவரது செயல்….அந்தப் பெண்ணின் உடலைக் கஷ்டப்பட்டு நீரின் மேல் மட்டத்துக்குக் கொண்டு வருகிறார்..அப்போதுதான் உணர்கிறார், நீரின் வேகத்தில் அந்தப் பெண்ணின் மேலாடை அடித்துச் செல்லப்பட்டு விட்டது என்று..
‘உயிரற்ற உடல்தானே…அது எப்படி இருந்தால் என்ன..மேலே கொண்டு போனால் போதும் ‘ என்று எண்ணவில்லை அவர்..
அவ்வளவு ஆபத்தான சூழ்நிலையிலும், சப்தம் போட்டு, மேலே சூழ்ந்து நின்று கொண்டிருந்தவர்களிடம் வேண்டி, ஒரு நீளமான துணியைத் தன்னிடம் கொடுக்குமாறு வேண்டுகிறார்… மேலே இருந்தவர்கள், நீல வண்ணத்தில், ஒரு நீளமான துணியைக் கீழே வீச, அதைக் கஷ்டப்பட்டுப் பிடித்து, அந்த நீரின் வேகத்திலும் அந்தப் பெண்ணின் உடலின் மேற்பகுதியில் கஷ்டப்பட்டு இறுகச் சுற்றி, பின்னர் கிரேன் மூலம் அந்த உடலை மேலே அனுப்பி வைத்தார்…
உயரற்ற உடலாக இருப்பினும், இறந்தே போயிருந்தாலும், ஒரு பெண்ணின் கண்ணியமும் பெருமையும் சிறிதும் குறைந்து விடக்கூடாது என்று அவரின் மானம் காத்த அந்தத் தீயணைப்பு வீரரின் மாவீரம், நம் தாய் நாட்டைக் காக்கும் நம் படை வீரர்களின் வீரத்துக்குச் சற்றும் குறைவானதல்ல…
தன்னுயிரே ஆபத்தில் இருக்கும் போதும், இறந்து போன ஒரு பெண்ணின் கௌரவம் சற்றும் இழிவு படாத வண்ணம் காப்பாற்றிய அந்த உன்னதமான மனிதருக்கு என் தலை தாழ்த்தி, இருகரம் கூப்பி வணக்கங்களையும், மரியாதையையும் செலுத்தியே ஆக வேண்டும்.