கட்டிப்பிடிக்க ஓடிய ரசிகர்… விட்டுக்கொடுக்காமல் ஓடிய தோனி – நாக்பூர் மைதான வைரல் காட்சிகள் – Tamil VBC

கட்டிப்பிடிக்க ஓடிய ரசிகர்… விட்டுக்கொடுக்காமல் ஓடிய தோனி – நாக்பூர் மைதான வைரல் காட்சிகள்

நாக்பூரில் நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியின் போது, மைதானத்தில் ரசிகருடன் தோனி ஓடிப் பிடித்து விளையாடிய வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இந்திய அணியைப் பொறுத்தவரை அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவர் தோனி. என்னதான், அதிக ரன்களை கேப்டன் விராட் கோலி குவித்திருந்தாலும் இவரைக் காட்டிலும் தோனிக்குதான் ரசிகர்கள் அதிகம். இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிக்காக இவர் விளையாடுவதால், தமிழகத்தில் இவருக்கு கூடுதலான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தோனியின் மீதுள்ள பாசத்தில் ரசிகர்கள் பலமுறை மைதானத்திற்குள்ளே நுழைந்து அவரது காலை தொட்டு வணங்கி சென்றிருக்கிறார்கள். இதுபோன்று சச்சின் போன்ற சில வீரர்களுக்குதான் நடந்துள்ளது. அந்த வகையில் நாக்பூரில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் அப்படியொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

முதலில் இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், பீல்டிங் செய்வதற்கு மைதானத்திற்குள் வீரர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, மைதானத்தின் பாதுகாப்பு பணியின் ஈடுபட்டு வரும் ஊழியர் ஒருவர் தோனியை பார்க்க அவரை நோக்கி வந்துள்ளார். ஆனால், ரோகித் சர்மாவுக்குப் பின்னால் தோனி ஒளிந்து கொண்டார். ஊழியரும் ரசிகருமான அவர் தோனியை நெருங்கியதும் அவருக்குப் பிடிகொடுக்காமல் தோனி ஓடினார். அந்த ஊழியரும் பின்னாலே துரத்தினார். அவர் துரத்த, தோனி ஓட.. அந்த இடமே கலகலவென ஆனது.

பின்னர், ஸ்டம்பிற்கு அருகில் தோனி நின்று கொண்டார். ஓடி வந்த அந்த ஊழியர் தோனியை கட்டிப்பிடித்தார். பதிலுக்கு தோனியும் அவரது முதுகில் தட்டிக் கொடுத்தார். இது ஒரு நெகிழ்ச்சியான சம்பவமாக இருந்தது. அப்போது, இரண்டு நடுவர்கள் கூட மைதானத்தில் வீரர்களுக்கு அருகில்தான் நின்று கொண்டிருந்தார்கள்.

அந்த ஊழியர் 7ம் எண் டி-சர்ட் அணிந்திருந்தார். டி-சர்ட்டின் பின்புறம் தல என்று எழுதி இருந்தது. அநேகமாக அவர் தமிழகத்தைச் சேர்ந்தவராகதான் இருக்க வேண்டும்.

ஊழியருடன் தோனி மைதானத்திலே ஓடிப் பிடித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வீடியோவை பதிவிட்டு தோனி ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *