காதலை சொல்லும் முன் இந்த விடயங்களில் கவனமாக இருங்க! - Tamil VBC

காதலை சொல்லும் முன் இந்த விடயங்களில் கவனமாக இருங்க!

காதல் முளைக்கும் களங்கள் கணக்கற்றவை. கண்டதும் காதல், காணாமலே காதல் என அப்படி முளைக்கும் காதலை நல்லமுறையில் வெளிப்படுத்தினால்தான், அதில் வெற்றிபெற முடியும். அந்தவகையில் காதலை வெளிப்படுத்தும்போது கவனமாக இருக்கவேண்டிய விஷயங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்… நீங்கள் விரும்பும் ஆண் அல்லது பெண் அழகினாலோ, கல்வி, பணம் அல்லது மற்ற காரணங்களால் ஈர்த்திருக்கலாம்.

ஆனால், தனக்கு காதல் வந்த காரணத்தை நேரடியாகச் சொல்லாமல், பொய்யான காரணத்தைத் தனக்கு சவுகரியமாகச் சொல்லி காதலை வெளிப்படுத்துவது கூடவே கூடாது. தனக்கு ஏற்கனவே தெரிந்தவராக இருந்தாலும் சரி, புதிதாக அறிமுகமானவராக இருந்தாலும் சரி, உங்கள் காதலை வெளிப்படுத்திய நொடியில் இருந்து அவரிடம் இருந்து ‘ஆம்’ என்ற பதில் வரவேண்டும் என்பதை எதிர்பார்க்காதீர்கள். ‘இது என் விருப்பம், அதே போல உனக்கு என்னைப் பிடித்திருந்தால் மட்டும் சம்மதம் சொல்’ என்று கூறலாம்.

இப்படிச் செய்வது உங்கள் மீது மரியாதையை உயர்த்தும்! ‘ஐ லவ் யூ’ என்ற வாக்கியமாக இல்லாமல், வேறு எப்படி எல்லாம் இருக்கலாம் என்று சிலர் தேடிப்பிடித்து முயற்சித்து, வித்தியாசமாகச் சொன்னாலும் பெருமளவில் ‘ஐ லவ் யூ’ என்கிற வாக்கியமே காதலை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

ஆகவே, ‘ஐ லவ் யூ’ வை தனக்குப் பிடித்தவரிடம் சொல்வதற்கு முன்பாக, உங்கள் மீது சிறு அளவிலாவது அவருக்கு விருப்பம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு ‘ஐ லவ் யூ’ சொல்லுங்கள். நீங்கள் விரும்புபவர் உங்களுடைய தோற்றம், பேச்சு, பழகும் விதம் இதையெல்லாம் பார்த்து உங்கள் மீது வேறொரு பிம்பத்தை வைத்திருக்கலாம். ஆனால், நீங்கள் அவர்களின் நினைப்புக்கு அப்படியே நேர்மாறாக இருக்கலாம். பார்த்ததும் காதல் என்பது திரைப்படத்திற்கு வேண்டுமானால் சுவாரசியமாக இருக்கலாம்.

அதனால், உங்கள் கல்வி, வேலை, குடும்பச்சூழல், உங்கள் எதிர்காலத் திட்டம், பிடித்தவை, பிடிக்காதவை உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை அவர்களிடம் தெரிவித்து, அவர்கள் அவற்றையெல்லாம் தெளிவாகப் புரிந்துகொண்டார்களா என்று தெரிந்த பின் காதலைச் சொல்வது நல்லது.


அதே போல காதலிப்பவர் பற்றிய முழு விவரங்களை நீங்கள் தெரிந்துவைத்துக்கொள்வதும் அவசியம்! காதலைச் சொல்லும்போது பயந்த நிலையில் ஏனோதானோவென்று சொன்னால், உங்கள் மீதான நம்பிக்கை குறையக்கூடும்.

அதற்காக கையில் ஒரு ரோஜா மலரோடு மண்டியிட்டுதான் காதலைச் சொல்ல வேண்டும் என்றில்லை. முகத்துக்கு நேராக கண்களைப் பார்த்து, சிறு புன்னகையுடன் வெளிப்படுத்துங்கள். அதே போல தைரியமானவர் என்பதை வெளிப்படுத்த, அவசரப்பட்டு ஆரம்பத்திலேயே தொடுதல் உள்ளிட்ட செய்கைகள் மூலம் காதலைச் சொன்னால், அதுவும்கூட உங்கள் மீதான மதிப்பீட்டைக் குறைத்துவிடும்.

காதலைச் சொல்ல இயற்கையான சூழல்களைத் தேர்ந்தெடுப்பது நல்ல மனநிலையைக் கொடுக்கும். அதே நேரத்தில் பீச், பார்க் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களாகவும் இருந்தால், நீங்கள் காதலை வெளிப்படுத்தும்போது, அது மற்றவர்களின் கவன ஈர்ப்பைச் செய்வதாக இருக்க வேண்டாம்.

நீங்கள் அப்படிச் செய்வது உங்கள் இணைக்குப் பிடிக்காதபட்சத்தில், அவர் உங்களை நிராகரிக்கக்கூடும். அதனால், பொது இடங்களில் காதலை வெளிப்படுத்தும்போது அவருக்கு எந்த வகையிலும் தொந்தரவு இல்லாத சூழலை உருவாக்கிக்கொண்டு காதலை சொல்லுங்கள்! ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் விருப்பம் இல்லாதவரிடம் கட்டாயப்படுத்திக் காதலைச் சொல்வது நல்லதல்ல.

அதனால், நீங்கள் காதலிக்கும் நபர் உங்கள் காதலை ஏற்றுக்கொள்ளப் போதுமான அவகாசம் கொடுங்கள். ரத்தத்தால் கடிதம் எழுதுவது, அழுது கெஞ்சுவது, போகும் இடமெல்லாம் பின் தொடர்வது இதெல்லாம் காதலில் சேராது. உங்கள் மீது அனுதாபத்தை ஏற்படுத்தி காதலிக்க வைத்தால், அதுவும் கட்டாயப்படுத்துவது போலத்தான். அதனால், காதலை மெல்லிய பூங்காற்றாய் நுகரப் பழகுங்கள்.

இணையத்தின் வழியிலேயே பல வேலைகள் நடந்துவிடுகின்றன. ஆணுக்கும் பெண்ணுக்குமான தகவல் தொடர்பு செல்போன் வழியே பரிமாறப்பட்டாலும் நீங்கள் முதன் முதலாக வெளிப்படுத்தும் காதல், நேரில் சொல்லும்படி இருப்பது நல்லது.

நேரில் சொல்லும்போது, அந்தத் தருணத்தில் உங்கள் முகங்களில் வெளிப்படும் மலர்ச்சி உங்களுக்குக் கிடைக்கும் வாழ்நாள் பொக்கிஷம். அந்த அனுபவத்தைத் தவறவிடாதீர்கள். செல்போன் இருக்கிறது என்பதால் மனதில் பட்டதை எல்லாம் பட்டென்று சொல்லிவிடலாம் என்ற நினைப்பில் விரும்பத்தகாத வார்த்தைகளைப் பிரயோகம் செய்வது உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். அதனால், இதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.-News & image Credit: maalaimalar

ads

Recommended For You

About the Author: Admin