வேற லெவல்! வெற்றி நடை போடும் “காந்தாரா” – திரை விமர்சனம் – Tamil VBC

வேற லெவல்! வெற்றி நடை போடும் “காந்தாரா” – திரை விமர்சனம்

இந்தியாவில் பெரும்பாலும் 100 கோடி வசூல் திரைப்படங்களை ஹிந்தி திரைப்படங்கள் தான் பெற்றிருக்கின்றது. இதுவரையில் வெளியான திரைப்படங்களில் சுமார் 100 ஹிந்தி திரைப்படங்கள் 100 கோடி வசூலை பெற்ற படங்களாக இருக்கின்றது.

தென்னிந்தியாவை பொறுத்தவரை சில தென்னிந்திய திரைப்படங்கள் தான் 100 கோடி வசூலை கடந்து இருக்கின்றது.

தமிழில் 30 திரைப்படங்களும் தெலுங்கில் 10 முதல் 15 திரைப்படங்களும் மலையாளத்தில் 7 திரைப்படங்களும் 100 கோடி வசூலை கடந்திருக்கின்றது.

ஆனால் கன்னட திரைப்படங்களில் 100 கோடி வசூலை கடந்த திரைப்படங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றது. கன்னடத்தில் நூறு கோடி வசூலை கடந்த முதல் திரைப்படம் கேஜிஎப் திரைப்படம் தான். அதற்குப் பிறகு இந்த வருடத்தில் வெளியான விக்ராந்த் ரோணா. இதன்பிறகு ஜேம்ஸ், 777 சார்லி, கே ஜி எஃப் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் 100 கோடி வசூலை கடந்த திரைப்படங்களாக இருக்கின்றது.

அந்த வரிசையில் தற்போது காந்தாரா திரைப்படம் நேற்று நூறு கோடி வசூலை கடந்து இருக்கின்றது. இந்த படம் மிகச் சிறிய திரைப்படமாக உருவாகி தற்போது அனைவரையும் ஆச்சரியப்படும் வகையில் வெற்றியை பெற்றிருக்கின்றது.

திரை விமர்சனம்

மலைப்பகுதி அரசர் ஒருவர் மன நிம்மதியின்றி நாட்டை விட்டு, காட்டுக்குள் செல்கிறார். அங்கு மக்கள் வழிபடும் கற்சிலை ஒன்றைக் கண்டதும் நிம்மதி ஏற்படுகிறது.

அவருக்குச் சொந்தமான மலைப்பகுதியை அந்தப் பகுதி மக்களுக்கு எழுதி கொடுத்துவிட்டு, சிலையை கொண்டு வருகிறார். அவர் குடும்பத்தைச் சேர்ந்த அடுத்த தலைமுறையினர் அந்த இடத்தை மீட்க முயற்சிக்கின்றனர். பூர்வகுடி மக்களிடம் நல்லவராக பேசி, அவர்களின் தெய்வம் மூலமாகவே அதை மீட்க முயற்சிக்கிறார் வாரிசு, தேவேந்திர சுட்டூரு. (அச்யுத் குமார்). அவர் திட்டம் அறியும் மண்ணின்மைந்தன் சிவா (ரிஷப் ஷெட்டி) என்னசெய்கிறார்? வாரிசின் ஆசை நிறைவேறியதா, இல்லையா என்பதுதான் படம்.

கன்னடத்தில் வரவேற்பைப் பெற்ற படத்தைத் தமிழில் டப் செய்திருக்கிறார்கள். தொன்மக் கதைகளின் வழியே, மக்களின் வாழ்விடங்களுக்கும் அதிகாரத்துக்கும் இடையில், ஆண்டாண்டு காலமாக நடக்கும் நில உரிமையை, எந்தவித பிரச்சாரமும் இன்றி சொல்லி இருக்கிறார், படத்தை இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டி.

காவல் தெய்வம், காட்டுப்பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள், அதிகாரவரம்புக்குள் வனம் வந்த பிறகு நடக்கும் கட்டுப்பாடுகள், கேள்விக் கேட்கப்படும் உரிமைகள், இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு என அனைத்தையும் கமர்சியலாகவே ‘காந்தாரா’ காட்டியிருந்தாலும் நம் கண்களை அசரவிடாமல், இழுத்துப் பிடித்து இருக்கையில் அமர வைத்து விடுவதுதான் இதன் திரைக்கதை மாயம். அந்தக் காட்டின் மாயம் என்று கூட சொல்லலாம்.

இரண்டரை மணி நேரத் திரைப்படத்தில், ‘கம்பளா’ எருமைப் போட்டி, அதைத் தொடர்ந்து நடக்கும் மோதல், எதிர்பார்ப்பது போலவே முதலாளி வில்லன், அம்மக்களின் பண்பாட்டுப் பின்னணி, திடீரென ஆட்டம் காட்டிப் போகும் காவல் தெய்வம், 90-களின் வாழ்க்கை என ‘காந்தாரா’ காட்டும் உலகம் வியக்க வைக்கிறது.

அதற்கு, காட்டின் அமைதியையும் ஆவேசத்தையும் ஒரு சேரக் காட்டும் அரவிந்த் காஷ்யப்பின் அசத்தலான ஒளிப்பதிவும் அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசையும் கே.எம்.பிரகாஷ், பிரதீக் ஷெட்டியின் படத் தொகுப்பும் கலைஇயக்கமும் பெரும் பலமாகி இருக்கிறது. படம் பார்த்துவிட்டு வந்தபின்னும் அதன் தாக்கத்தை உணர்த்தும் இவர்களின் உழைப்பு பெரும் பங்கு வகிக்கிறது.

சிவாவாக வரும் நாயகன் ரிஷப் ஷெட்டி படத்துக்குத் தூணாக நிற்கிறார்.அப்பாவித்தனம், ஆக்ரோஷம், காதல் ஏக்கம், எதிரிகளைப் பந்தாடும் ஆவேசம் என அவர் நடிப்பில் அத்தனை இயல்பு. கிளைமாக்ஸில் அருள் வந்து அவர் போடும் ஆட்டமும் ஆக்ரோஷமாக மனிதர்களை வேட்டையாடுவதும் சிலிர்க்க வைக்கிறது. காதலுக்காகவே வந்து போகும் நாயகி சப்தமி கவுடா, ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகக் கூறி, மலைப் பகுதியை மீட்க வரும் வன அதிகாரி கிஷோர், அரசப் பரம்பரை அச்யுத் குமார் உட்பட அனைவரும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இரண்டாம் பாதியில் மெதுவாக நகரும் கதை, சுவாரஸ்யமற்ற காதல் காட்சி, நாயகனை வீரசூரனாகக் காட்டுவது உட்பட வழக்கமான சினிமாவின் குணநலன்கள் இருந்தாலும் அது கதையைப் பாதிக்கும் குறைகளாகத் தெரியவில்லை என்பதுதான் ‘காந்தாரா’வின் காந்தமாக இருக்கிறது.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.