பொலிஸாரின் குறி தவறி கம்பஹாவில் உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் வெளியான தகவல். – Tamil VBC

பொலிஸாரின் குறி தவறி கம்பஹாவில் உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் வெளியான தகவல்.

கம்பஹா – மீரிகம,தங்ஹோவிட பிரதேசத்தில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தில் உயிரிழந்த பெந்தோட்ட – ஹபுருகல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இரேஷா ஷியாமலி என்ற பட்டதாரியான பெண் சுற்றுலாத்துறை நிர்வாகத்தில் பட்டம் பெற்றுள்ளதுடன், இந்துருவாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தற்போது முகாமையாளராக பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் வெளியான தகவல்
இவ்வாறு உயிரிழந்த இளம் பெண் தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் கம்பஹா பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வீடு திரும்பிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் பேருந்தின் பின் பக்க ஆசனத்தில் அமர்ந்திருந்த நிலையில் இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டுப்பிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்,இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் ஆரம்பம்
கம்பஹா – தங்கொவிட்டவில் உள்ள மதுபானசாலையொன்றில் கொள்ளையிடும் நோக்கில் காரில் சிலர் வந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தங்கொவிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்று குறித்த இடத்திற்கு வந்துள்ளது.
இதன்போது தப்ப முயன்ற கொள்ளையர்களை பிடிக்க பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில், அருகில் சென்ற பேருந்தில் பயணித்த பெண் அங்கு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இரண்டு கொள்ளையர்கள் காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.