நனவுலகுக்கு வரும் பொன்னியின் செல்வன் – ஒரு முன்னோட்டம் – Tamil VBC

நனவுலகுக்கு வரும் பொன்னியின் செல்வன் – ஒரு முன்னோட்டம்

மக்கள் திலகம் எம்ஜிஆர் முதல் உலக நாயகன் கமலஹாசன் வரை பலரின் கனவுகளில் நீந்தித் திளைத்து, யார் கைகளிலும் சிக்காமல் விலாங்கு மீனாய் வழுக்கி ஓடிய பொன்னியின் செல்வன், இப்பொழுது மணிரத்தினம் அவர்களின் கைவண்ணத்தில் கம்பீரமாய் மீசை முறுக்கி நனவுலகுக்கு வந்திருக்கிறது.

பல கோடி வாசகர்களின் விருப்பமான சரித்திர கதையாகி பல பதிப்புகள் கண்டு 68 வருடங்களாக வாசகர்களின் கைகளில் தவழ்ந்தவன், வருகிற 30 ஆம் தேதி திரையில் வெற்றிகரமாக மின்னப் போகிறான்.

1950-ல் இந்தக் கதையை கல்கி எழுதும் போது, 1994-ம் ஆண்டின் உலக அழகி தன் கதையில் நடிப்பார் என்று நினைத்து பார்த்திருப்பாரா என்றால் சற்று சந்தேகம் தான். ஆனால் கதையில் அவர் வர்ணிக்கும் ஒவ்வொரு இடங்களும், கதாபாத்திரத்தின் அணிகலன் முதற்கொண்டு நுட்பமாக விவரிக்கும் அழகும், பின்னாளில் இந்த கதையை படமாக்கும் நோக்கத்தோடு தான் எழுதியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கதையில் அவர் உருவாக்கிய ஆச்சரியமூட்டும் சஸ்பென்ஸ்களும் அந்த முடிச்சுகளை அவிழ்க்கும் விதமும் தான் வாசகர்களை தொடர்ந்து கட்டிப் போட்டு வந்தது.

தாத்தாவின் ஆர்வமாகவும், அப்பாவின் பொழுதுபோக்காகவும், பேரனின் ரசனையாகவும் தலைமுறை இடைவெளி இன்றி மூன்று தலைமுறையினருக்கும் விருப்பமான கதைப் புத்தகம் எது என்றால் அது இந்த கல்கியின் பொன்னியின் செல்வன் தான். அந்த வகையில் கல்கி அவர்களுக்கு மிகப்பெரிய வணக்கங்கள்.

ஒரு சில நடிகர்களை வைத்து படம் எடுக்கும் ஷார்ட் பிலிம் இயக்குனர்களே டென்ஷனில் உழலும் போது, பல ஆயிரம் நடிகர் நடிகைகளை களத்தில் இறக்கி, அவர்களின் மனம் கோணாமலும் அதே சமயம் தான் விரும்பும் வகையிலும் காட்சிகளை படமாக்குவது சற்று சிரமமான காரியம் தான். அது மட்டுமல்ல ஐந்தறிவு ஜீவன்களையும் அவற்றிற்கு ஏற்ப வளைந்து கொடுத்து வேலை வாங்க வேண்டும். இவை இரண்டையுமே சாதித்துக் காட்டி இருக்கிறார் இயக்குனர் மணிரத்தினம்.

இதில் என்ன பிரச்சனை என்றால் படத்தின் கதை அனைவருக்கும் தெரியும். அப்படியெனில் திரையரங்குக்கு வரும் ரசிகர்களை ஏதாவது ஒரு வகையில் இயக்குனர் திருப்திப்படுத்தியாக வேண்டும். அது பாடல் காட்சியாக இருக்கலாம் அல்லது நடிகரின் மேனரிசமாக இருக்கலாம், அல்லது ஏதோ ஒரு சிரிப்பு காட்சியோ, கவர்ச்சியோ இப்படி ஏதோ ஒன்று ரசிகர்களின் மனதைத் தொட வேண்டும். அப்பொழுதுதான் மீண்டும் மீண்டும் ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள்.

அது மட்டுமல்லாமல் கதையைப் படித்த வாசகர்கள் தங்கள் மனதில் ஒரு கற்பனையை உருவாக்கி வைத்திருப்பார்கள். அந்த கற்பனையுடன் திரையில் உலவும் பாத்திரங்கள் ஒன்றிணைந்து விட்டால் போதும், படம் மிகப்பெரிய வெற்றி தான்.

இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். பொதுவாக ரஜினி நடித்த படம் அல்லது கமல் நடித்த படம் என்று வரும்போது அதன் இயக்குனர்கள் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படுவார்கள். ரஜினியின் முந்தைய படத்துடன் அந்த புதிய திரைப்படம் ஒப்பீடு செய்யப்படும். ஆனால் மணிரத்தினம் மாதிரியான பிரபல இயக்குனர்கள் படத்தை இயக்கும் போது அது அவர்களின் படமாகி போகிறது. விக்ரமோ, கார்த்தியோ அல்லது ஜெயம் ரவியோ இங்கு கம்பேர் செய்யப்படுவதில்லை. அந்த வகையில் தற்போது மணிரத்தினத்திற்கு மிகப்பெரிய சேலஞ்சாக இருப்பது பொன்னியின் செல்வன் புத்தகம் தான்.

ஏற்கனவே, இது மாதிரியான இதிகாச புராணக் கதைகளை ரோஜா, தளபதி என்று எடுத்து வெற்றிவாகை சூடியவர் தான் மணிரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.