டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை இளம்புயல் புதிய உலக சாதனை! – Tamil VBC

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை இளம்புயல் புதிய உலக சாதனை!

டி20 உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸை இலங்கை அணி அடித்து ஓட விட்ட நிலையில் அந்த அணியின் இளம் வீரர் ஹசரங்க புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

இலங்கையின் சீனியர் வீரர்கள் எல்லாரும் ஓய்வு பெற்ற நிலையில் 2015 லிருந்தே இலங்கை கிரிக்கெட் மிக மோசமாக தேய்ந்து கொண்டேதான் வருகிறது. சீனியர் வீரர்கள் பெரிதாக கைக்கொடுக்காத நிலையில், எக்கச்சக்கமான இளம் வீரர்கள் இலங்கை அணிக்கு அறிமுகமாகிவிட்டனர். ஆனால், யாராலுமே ஒரு ஸ்டார் பர்ஃபாமராக உயர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க முடியவில்லை. எல்லாவற்றுக்கும் விதிவிலக்கு இருப்பது போல, இதற்கும் விதிவிலக்காக வனிந்து ஹசரங்கா எனும் இளம் வீரர் மட்டும் மிரட்டலான பல சம்பவங்களை செய்து ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

லெக்ஸ்பின் ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்கா 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால், 2017 -ம் ஆண்டு இலங்கை அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான ஹசரங்கா தனது முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் எடுத்து அசத்தியிருந்தார். முதல் போட்டியிலேயே முத்திரை பதித்ததால் தொடர்ந்து இலங்கை அணியில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், தொடக்கத்தில் சர்வதேச வீரர்களுக்கு எதிராக பந்துவீசுவதற்கு ஹசரங்கா கொஞ்சம் தடுமாறவே செய்தார். ஒரு சாதாரண பந்துவீச்சாளராக சராசரியாகவே பந்து வீசிக்கொண்டிருந்தார். மேலும், இலங்கை அணியுமே இவரை ஒரு முழு நேர பந்துவீச்சாளராகக் கருதயிருக்கவில்லை. அதனாலயே சில போட்டிகளில் முழுமையாக அவருக்கான ஓவர்களே கொடுக்கப்படவில்லை. ஒரு கட்டத்திற்கு பிறகு ஹசரங்காவும் தன்னை மெருகேற்றிக் கொண்டு கிடைக்கிற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.

2017-18 இந்தக் காலக்கட்டங்களில் அவருடைய எக்கானமி ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. ஆனால், அதன்பிறகு அவருக்குள் என்ன சக்தி புகுந்ததோ தெரியவில்லை. பேட்ஸ்மேன்கள் பார்த்து பதறும் அளவுக்கு அபாயகரமான லெக் ஸ்பின்னராக உருமாறிவிட்டார். இதற்கு சமீபத்திய உதாரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் செய்த சம்பவங்களை குறிப்பிடலாம். இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸுக்குப் பயணப்பட்டது. அங்கே முதல் டி20 யிலேயே அகிலா தனஞ்செயா ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து பொல்லார்ட் மாஸ் காண்பித்திருப்பார். ஸ்பின்னர்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கூட க்ரவுண்ட்டுக்கு வெளியே சிக்சர் அடிக்கும் திறன் படைத்தவர் பொல்லார்ட். ஆனால், இந்தப் போட்டியில் தனஞ்செயா ஓவரில் 6 சிக்சர்களை அடித்த பொல்லார்டால் வனிந்து ஹசரங்காவின் லெக் ஸ்பின்னை தொடக்கூட முடியவில்லை.

அபுதாபியில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இலங்கை அணி 189 ரன்களைக் குவித்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியை 169/8 என்று முடக்கி வெற்றி பெற்றது.

இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டும் பதிவு செய்த நிலையில் நடப்பு சாம்பியனான இந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

இந்த போட்டியில் இலங்கை பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஹசரங்கா இத்தொடரில் இதுவரை 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், ஒரு டி20 உலகக் கோப்பை சீசனில் அதிக விக்கெட்களை கைப்பற்ற வீரராக மாறி உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்குமுன் 2012-ல் அஜந்தா மெண்டீஸ் 15 விக்கெட்களை கைப்பற்றியே சாதனையாக இருந்தது. அவரும் இலங்கை வீரர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *