டெல்லி அணிக்கெதிரான போட்டியில், சென்னை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி! இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சென்னை – Tamil VBC

டெல்லி அணிக்கெதிரான போட்டியில், சென்னை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி! இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சென்னை

டெல்லி அணிக்கெதிரான போட்டியில், சென்னை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் பிளே ஆப் போட்டியில், சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். தோல்வி பெறும் அணி கொல்கத்தா-பெங்களூரு அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெற்று வரும் அணியுடன் மோதும். இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அது இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில், முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் குவித்தது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக துவக்க வீரர் ப்ரித்வி ஷா 60 ஓட்டங்களும், ஹிட்மயர் 37 ஓட்டங்களும், கடைசி கட்டத்தில் சென்னை அணியின் பந்து வீச்சை அடித்து துவைத்த ரிஷப் பாண்ட் அவுட்டாகமல் 51 ஓட்டங்களும் குவித்தார்.

குறிப்பாக, இப்போட்டியின் ஒரு கட்டத்தில் இரண்டாம் கட்ட பிரேக் விட்ட போது, சென்னை அணியின் தலைவரான டோனி, நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஏனெனில், பிராவோ வீசிய ஓவரின் போது, வைட் கொடுக்கப்பட்டது.

அதன் காரணமாகவே வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. அதன் பின் 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரர் டூ பிளிசிஸ் 1 ஓட்டத்தில் அவுட் ஆகி சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இருப்பினும் அடுத்து வந்த ராபின் உத்தப்பா யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக விளையாடி 44 பந்தில் 63 ஓட்டங்கள் குவித்தார். இவரைத் தொடர்ந்து வந்த அம்பத்தி ராயுடு, ஷ்ரேயாஸ் அய்யரின் துல்லியமான் த்ரோவால் ரன் அவுட் ஆகி 1 ஓட்டத்தில் வெளியேறினார்.

மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த துவக்க வீரர் ருத்ராஜ் கெய்க்ட்வாட் 50 பந்தில் 70 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, ஆட்டம் சூடு பிடிக்க துவங்கியது. ஒரு கட்டத்தில் சென்னை அணியின் வெற்றிக்கு 8 பந்துகளுக்கு 19 ஓட்டங்கள் தேவை என்ற போது, களத்தில் இருந்த டோனி அற்புதமாக சிக்ஸர் பறக்கவிட்டார்.

இதனால் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது, மொயின் அலி அவுட் ஆனதால், ஆட்டம் பரபரப்பின் விளிம்பிற்கு சென்றது. ஆனால் டோனி நான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்கும் வகையில்  பவுண்டரிகள் விளாசி வழக்கம் போல் தன்னுடைய பினிசிஷ் ஸ்டைலில் ஆட்டத்தை முடித்து, காட்டினார்.

இதை சென்னை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டது. இறுதிப் போட்டி வரும் 15-ஆம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.