2 லட்ஷம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய குரங்கு! மரத்திலிருந்து கொட்டிய பணமழை – Tamil VBC

2 லட்ஷம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய குரங்கு! மரத்திலிருந்து கொட்டிய பணமழை

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் சர்மா. வக்கீலான இவர் நிலப்பதிவுக்கான முத்திரை தாள்களை வாங்கி விற்கும் தொழிலையும் செய்து வந்தார்.

நேற்று இவர் தனது வாடிக்கையாளர் ஒருவரிடம் ரூ.2 லட்சத்தை பெற்றுக்கொண்டு முத்திரை தாள்கள் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார். ராம்பூரில் உள்ள நிலப்பதிவு அலுவலகத்துக்கு அவர் ரூ.2 லட்சம் பணத்துடன் சென்றார்.

ரூ.2 லட்சத்தை அவர் ஒரு பையில் வைத்திருந்தார். அந்த பணத்துடன் அவர் அலுவலகத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு குரங்கு அவரது பணப்பையை பறித்து சென்றது. எதிர்பாராத இந்த பணப்பறிப்பால் வக்கீல் வினோத்குமார் சர்மா நிலைகுலைந்து போனார்.

அவர் சுதாரிப்பதற்குள் அந்த குரங்கு பணப்பையுடன் அருகில் உள்ள வேப்பமரத்தில் ஏறியது. வக்கீல் சர்மா என்ன செய்வது என்று புரியாமல் அந்த குரங்கையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு பையை போட்டு விடு என்று குரங்கை பார்த்து கூச்சலிட்டார்.

வக்கீல் சர்மாவின் கூக்குரல் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து திரண்டனர். இதைக் கண்டதும் குரங்கு அந்த பையை திறந்து இரண்டு 50 ஆயிரம் ரூபாய் கொண்ட நோட்டு கட்டுகளை கையில் எடுத்துக் கொண்டது. மீதமுள்ள ஒரு லட்சம் ரூபாயுடன் பையை கீழே போட்டு விட்டது.

இதனால் வக்கீல் சர்மாவுக்கு பாதி உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது. மீதமுள்ள ஒரு லட்சம் ரூபாயையும் கீழே போட்டு விடும்படி அவர் குரங்கை பார்த்து கத்தினார்.

அந்த சமயத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக அந்த குரங்கு கட்டுகளை அவிழ்த்து ரூபாயை அள்ளி வீச தொடங்கியது. மரத்தில் இருந்து பண மழை பெய்தது போல அந்த காட்சி இருந்தது.

குரங்கு 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுவதை கண்டதும் பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். போட்டி போட்டு ரூபாய் நோட்டுகளை எடுத்தனர். ஒரு லட்சம் ரூபாயையும் அந்த குரங்கு அள்ளி வீசியது.

அதிர்ச்சி அடைந்த வக்கீல் சர்மா பொதுமக்களிடம் பணத்தை திருப்பி தந்து விடும்படி பரிதாபமாக கேட்டார். பெரும்பாலானவர்கள் அவரிடம் பணத்தை கொடுத்து விட்டனர். அவற்றை கணக்கிட்ட போது ரூ.95 ஆயிரம் இருந்தது.

ரூ.5 ஆயிரம் மட்டும் பறிபோய் இருந்தது. எப்படியோ பணம் கிடைத்ததே என்று ஆறுதல் பட்டபடி வக்கீல் சர்மா புறப்பட்டு சென்றார்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *