யாழ்ப்பாணப் பேச்சு வழக்கும் மருவி வரும் தென்பகுதி பேச்சு மொழிகளும்.! ஓர் ஒப்பீடு – Tamil VBC

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கும் மருவி வரும் தென்பகுதி பேச்சு மொழிகளும்.! ஓர் ஒப்பீடு

”பொங்கல் நல்ல ருசியாக இருக்கிறது ” என்றேன்.”நானும் நெடுகப் பார்த்திருக்கிறேன் நீங்கள் புக்கை என்று சொல்லாமல் பொங்கல் என்று மட்டும் தான் சொல்லுகிறீர்கள் ” என்றார்.”நானும் திருகோணமலை வாசியாக 6 வருடங்கள் இருந்ததால் சில சொற்கள் என்னுடன் ஒட்டி விட்டன ” என்றேன்.புக்கை என்பது சிங்கள மொழியில் அசிங்கமான ஒரு சொல்லாகக் கேள்விப்பட்டுள்ளேன்.தமிழகத் தமிழர்கள் பொங்கல் என மட்டும் தான் சொல்கின்றனர் ” என்றேன்.யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் புக்கை என்ற சொல் சாதாரண ஒன்று.திருகோணமலை வாசியாக இருந்த காரணத்தால் ” சோறு ஆக்கியாச்சு, கறி ஆக்கியாச்சு , முடி வெட்டிப் போட்டு வாறன்,கொள்ளி ( விறகு ) ” போன்ற சொற்கள் போலப் பல சொற்கள் என்னுடன் ஒட்டி விட்டன.சில நேரம் பைம்பல் மூட் வந்தால் ” எப்படி” என யாரும் கேட்டால் ”கெடக்கிறன்” என்ற கிண்ணியா முஸ்லீம் தமிழும், அத்துடன் ”அவன் ஒரு வேக்க ( வெருளி ) ” என்ற தமிழும் வரும்.

திருகோணமலையில் சில கிராமப் புறங்களில் திருமணப் பதிவை ” கசாது ” வைக்கப் போறம் என்பார்கள்.அது என்ன கசாது என ஆராய்ந்து பார்த்தேன்.

கசாத பெந்தலா என்ற சிங்களச் சொல்லில் இருந்து விவாகப் பதிவு கசாது என வந்துள்ளது.அது போலச் செவ்விளநீரை ” தம்பிலி ” என்ற சிங்களச் சொல் கொண்டு அழைக்கின்றனர்.

தேர்தலில் விருப்பு வாக்கை மனாப்பு எனச் சாதாரணமாக அழைப்பதையும் பார்த்துள்ளேன்.ஆனாலும் யாழ்ப்பாணத்தில் ” ஒக்கொம (எல்லாம் ) ”என்ற சிங்களச் சொல் மூத்த தலைமுறையினர் சிலரிடமுள்ளது.கிண்ணியாவில் முஸ்லீம் மக்கள் சுகயீனம் வந்து இறப்பதை ” நசல் வந்து மௌத்தாப் போனாங்க என்பார்கள்.யாழ்ப்பாணத்தில் நசல் என்பது மேக நோய் என்ற கருத்தில் வழங்கப்படுகிறது.

நசல் என்பது தீங்கான எதற்கும் உபயோகிக்கப்படுவதுண்டு.பச்சை மிளகாயை திருமலையில் கொச்சிக்காய் என்ற சிங்களப்பெயராலையே அழைக்கின்றனர்.

தரையில் இருக்கும்போது முடி. கீழே விழுந்து விட்டால் மயிர் ஆகின்றது.கேரளாவின் கொச்சினில் இருந்து வந்த இனம். அதனால் கொச்சி என அழைக்கின்றனர். மிளகாய் வகையினுள் கொச்சி எனத் தனி ஒரு வகையும் உள்ளது. அது சிறியது.காரம் மிகுந்தது. தற்போது மரபணு மாற்றப்பட்ட உறைக்காத மிளகாய்கள் தாராளம். எமது பாரம்பரிய இனங்களை விரைவில் தொலைக்கப் போகிறோம்.

நன்றி:வேதநாயகம் தபேந்திரன்

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.