புத்தன் அல்ல நானும் உங்களில் ஒருவன்! சிவகுமார் விளக்கம்!! – Tamil VBC

புத்தன் அல்ல நானும் உங்களில் ஒருவன்! சிவகுமார் விளக்கம்!!

பாதுகாவலையும் மீறி செல்ஃபி எடுத்த இளைஞரின் செல்போனைத் தட்டிவிட்டது ஏன் என நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார், தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவரின் செல்போனைத் தட்டிவிட்டார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்த நிலையில், நடிகர் சிவகுமார் இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில், “செல்ஃபி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, ஊட்டி தொட்டபெட்டா போன்ற இடங்களுக்குச் சென்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அது பற்றி நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால், பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்துகொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்துக்குச் செல்வதற்குள் பாதுகாப்புக்கு வரும் ஆட்களைக்கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைப்பேசியை வைத்து செல்ஃபி எடுக்கிறேன் என்று நடக்கக்கூட முடியாமல் செய்வது நியாயமா?

தங்களை புகைப்படம் எடுக்கிறேன் என்று கேட்கமாட்டீர்களா? வி.ஐ.பி என்றால் தான் சொல்லும்படிதான் இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? ஆயிரக்கணக்கான மக்களுடன் எத்தனையோ விழாக்களிலும் விமான நிலையங்களிலும் புகைப்படம் எடுத்துள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நான் புத்தன் என்று என்னைச் சொல்லவில்லை. உங்களைப்போல் நானும் ஒரு மனிதன்தான். எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மேலும், என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு பின்பற்றுங்கள் என்று கூறவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் ஹீரோதான். அதேபோல், அடுத்தவர்களை எந்தளவுக்குத் துன்புறுத்துகிறோம் என்று நினைத்துப் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் பலர் நடிகர் சிவகுமாரின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து வந்த நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *