காரணமே தெரியாமல் நாம் பின்பற்றி வரும் சில பழக்கவழக்கங்கள்! – Tamil VBC

காரணமே தெரியாமல் நாம் பின்பற்றி வரும் சில பழக்கவழக்கங்கள்!

நாம் சிறு வயதில் இருந்து ஒருசில விஷயங்களை காரணம் தெரியாமல் பின்பற்றி வருவோம். ஆனால் வளர்ந்த பின் பலரும் அந்த விஷயங்கள் ஓர் மூடநம்பிக்கை என்று உணர்வோம். இன்றும் பல மதங்களில் ஒருசில விஷயங்களை நம் முன்னோர் பின்பற்றினர் என்று தவறாமல் பின்பற்றுவோம்.

அப்படி இந்தியாவில் நிறைய மூடநம்பிக்கைகள் தினமும் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் என்னவென்று கேட்டால், அப்படி செய்தால் தீங்கு விளையும் என்று நம் தாய் கூறியிருப்பதைக் கூறுவோம். ஆனால் அதற்கு பின் இருக்கும் உண்மையான காரணத்தைக் கேட்டால், இத்தனை நாட்கள் காரணம் தெரியாமல் பின்பற்றியுள்ளோமே என்று நினைப்போம்.

இங்கு அப்படி இந்தியாவில் காரணம் தெரியாமல் பின்பற்றி வரும் சில மூடநம்பிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

வீட்டினுள் குடையை விரிப்பது
பொதுவாக வீட்டினுள் குடையை விரிக்கக்கூடாது என்று சொல்வார்கள். அது ஏன் தெரியுமா? வீட்டினுள் குடையை திறந்தால் அதனால் வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடையும் என்பதால் மட்டுமே தவிர, வேறு எந்த ஒரு காரணமும் இல்லை.

எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாயை நூலில் கட்டி தொங்கவிடுதல்
பொதுவாக வண்டிகளில் மற்றும் வீட்டின் முன்புறம் எலுமிச்சை, பச்சைமிளகாயை நூலில் கட்டித் தொங்கவிடுவார்கள். இதற்கு காரணமாக வீட்டினுள் கெட்ட சக்தி நுழையாமல் இருக்கும் என்று காரணத்தை சொல்வார்கள். ஆனால் உண்மையில், இப்படி செய்வதன் மூலம் காட்டன் நூலானது பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சையின் உள்ள வாசனையை உறிஞ்சி, வீட்டினுள் கொசுக்கள் மற்றும் இதர பூச்சிகள் நுழைய விடாமல் சிறந்த பூச்சிக்கொல்லியாக இருக்கும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடைந்த கண்ணாடியை வீட்டில் பயன்படுத்தக்கூடாது
இதன் உண்மையான காரணத்தைக் கேட்டால், நீங்கள் உண்மையிலேயே அதிர்ச்சி அடைவீர்கள். அது என்னவெனில், கண்ணாடியின் விலை அக்காலத்தில் அதிகம். எனவே கவனக்குறைவைத் தவிர்க்க, நம் முன்னோர்கள் உடைந்த கண்ணாடி வீட்டிற்கு ஆகாது என்று கூறி, இன்று வரை பலரது வீட்டிலும் கண்ணாடி பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. என்ன சரி தானே! உங்கள் வீட்டிலும் நீங்கள் கண்ணாடியை மிகவும் கவனமாகத் தானே வைத்திருக்கிறீர்கள்.

மாலையில் நகம் வெட்டக்கூடாது
பொதுவாக மாலை நேரத்தில் அதுவும் 6 மணிக்கு மேல் நகம் வெட்டக்கூடாது என்று கூறுவார்கள் என்பதால் காலங்காலமாக நாமும் அதைப் பின்பற்றுகிறோம். ஆனால் இதன் பின்னணியில் உள்ள உண்மைக் காரணம், மாலையில் வெளிச்சம் அதிகம் இருக்காது. குறிப்பாக அக்காலத்தில் எல்லாம் மின்சார விளக்குகள் இல்லை. மண்ணெண்ணை விளக்குகள் இருந்ததால், இந்நேரத்தில் நகத்தை வெட்டினால் காயங்கள் நேரும். ஆனால் இந்த காரணத்தைக் கூறினால் யாரும் பின்பற்றமாட்டார்கள். ஆகவே மாலை நேரத்தில் நகத்தை வெட்டுவது நல்லதல்ல என்று கூறி, நம்மை பின்பற்ற வைத்துவிட்டார்கள் நம் முன்னோர்கள்.

கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது
கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியே செல்லக்கூடாது என்று பலர் சொல்வதைக் கேட்டு, இன்றும் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம் கிரகணத்தின் போது சூரியனிமிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள் மிகவும் கடுமையாக இருப்பதால், இந்நேரத்தில் கர்ப்பிணிகள் வெளியே சென்றால் அதனால் வயிற்றில் வளரும் கருவிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தான்.

6 மணிக்கு மேல் வீட்டை பெருக்கக்கூடாது
இன்று பலரும் 6 மணிக்கு மேல் வீட்டைப் பெருக்கமாட்டார்கள். ஏன் என்று கேட்டால், வீட்டிற்கு லட்சுமி வரும் நேரம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில், அக்காலத்தில் 6 மணிக்கு மேல் வீட்டில் வெளிச்சம் குறைவாக இருப்பதால், தரையில் என்ன பொருட்கள் உள்ளது என்று சரியாக தெரியாது என்பதால் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது
பழங்காலம் முதலாக செவ்வாய் கிழமைகளில் மட்டும் முடி வெட்டுவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் காரணம் என்னவென்று கேட்டால் யாருக்கும் தெரியாது. இருப்பினும் இன்று வரை செவ்வாய் கிழமைகளில் மக்கள் முடி வெட்டுவதைத் தவிர்த்து வருகிறார்கள்.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *