புகைப்பிடிப்பதால் மாரடைப்புவரும் வாய்ப்பு பெண்களுக்கு அதிகம்…. – Tamil VBC

புகைப்பிடிப்பதால் மாரடைப்புவரும் வாய்ப்பு பெண்களுக்கு அதிகம்….

சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்தமுள்ள பெண்கள் புகை பிடித்தால், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஆண்களைவிட அதிகம் உள்ளதாக இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சையும், புகைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான ஆதரவும் பெண்களுக்கு வழக்கப்பட வேண்டுமென்று அந்த ஆராய்ச்சி முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இங்கிலாந்தை சேர்ந்த 5 லட்சம் பேரின் ‘பயோ பேங்க்’ தரவுகள் பயன்படுத்தப்பட்டன. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 7 வருட காலத்தில் 5,081 பேருக்கு முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. அதில் மூன்றில் ஒருவர் பெண்ணாக இருந்தார். அனைத்து வயது ஆண்களுக்கும் ஏற்படுவதைவிட பெண்களுக்கு குறைந்தளவே மாரடைப்பு ஏற்பட்டாலும், சில ஆபத்து காரணிகள் பெண்களில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.

புகை பிடிக்காத பெண்களை விட புகை பிடிக்கும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு 3 மடங்கு வாய்ப்பிருப்பதாக இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், ஆண்களில் 2 மடங்கு மட்டுமே ஆபத்தை கூட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் கொண்ட பெண்களுக்கு ஆண்களை விட 83 சதவீதம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும், முதல், இரண்டாம் வகை சர்க்கரை நோயுடைய ஆண்களை விட பெண்களுக்கே அதிக அளவு பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்த ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. பாலினம் சார்ந்து இந்த பாதிப்புகள் எப்படி மாறுபடுகின்றன என்பது குறித்து தங்களுக்கு இதுவரை தெரியவில்லை என்றும், ஆனால் உயிரியல் காரணிகள் முக்கிய காரணமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உதாரணமாக, மோசமான உணவு முறை, வாழ்க்கைப்போக்கின் காரணமாக ஏற்படும் 2-ம் வகை சர்க்கரை நோய் கொண்ட பெண்களுக்கு ஆண்களை விட இதயம் சம்பந்தமான பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. தங்களுக்கு இதயம் சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டுள்ளதை பெரும்பாலான பெண்கள் உணருவதில்லை என்றும், அறிந்தவர்கள் சரியான மருத்துவ சிகிச்சையை பெறுவதில்லை எனவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பெண்களை விட ஆண்களுக்கே அதிக அளவு மாரடைப்பு ஏற்பட்டாலும், இங்கிலாந்தில் பெண்கள் அதிக அளவு உயிரிழப்பதற்கு இதய நோயே காரணமாக உள்ளதென்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டாலும், பெரும்பாலான பெண்களுக்கு ஆபத்தின் வீரியம் புரியவில்லை என்றும் ஆராய்ச்சி குழுவினர் கூறுகிறார்கள்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *