பச்சிளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு அடிப்படை….. – Tamil VBC

பச்சிளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு அடிப்படை…..

பச்சிளம் குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை சரியாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் தவிர, வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. பலர் குழந்தை பிறந்ததுமே சர்க்கரை தண்ணீர் கொடுப்பார்கள். இது தவறான பழக்கம். இதனால், கலோரி அதிகமாவதோடு, குழந்தைக்கு இன்பெக்‌ஷனும் வரக்கூடும். தாய்ப்பாலிலேயே தேவையான நீர்ச்சத்து உள்ளது. அதனால் தண்ணீர் தர தேவை இல்லை. ஏழாவது மாதத்தில் திட உணவை கொடுக்க தொடங்கலாம். பலர் செரிமானம் எளிதாக, நன்கு குழைத்த மோர், தயிர்சாதம் மட்டும் கொடுப்பார்கள். குழந்தைக்கு பருப்பு சாதமும் கொடுக்கலாம். இதனால், உடலில் புரதம், விட்டமின் பி, நார்ச்சத்து ஆகியவை சேரும்.

வேலைக்கு போகும் தாய்மார்கள் தாய்ப்பாலை சுத்தமான எவர்சில்வர் கிண்ணத்தில் பிடித்து, இறுக்கமான மூடி போட்டு, ப்ரிட்ஜில் வைத்துவிடலாம். தேவைப்படும்போது (12 மணி நேரத்துக்குள்) எடுத்துப் புகட்டலாம். ப்ரிட்ஜில் வைத்த பாலை கொதிக்க வைக்கக் கூடாது. ப்ரிட்ஜிலிருந்து எடுத்து, ஒரு மணி நேரம் வெளியே வைத்து, குளிர்ச்சி குறைந்ததும் குழந்தைக்கு புகட்ட வேண்டும். குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது, பால் வழிந்து கழுத்து, தோள்பட்டைமேல் பட வாய்ப்புள்ளது. இதை உடனுக்குடன் துடைக்காமல் விட்டால், சருமத்தில் சிறு ஒவ்வாமை ஏற்படலாம்.

முதல் 3 மாதங்கள் வரை, குழந்தை 18 முதல் 20 மணி நேரம் தூங்கும். பிறகு, தூக்கம் படிப்படியாக குறையும். குழந்தை தூங்கும் இடத்தில் கொசுக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுவலை பயன்படுத்துவது நல்லது. ரசாயன கொசுவத்திகளை தவிர்க்க வேண்டும். ஹெபடைட்டிஸ் பி, போலியோ தடுப்பூசிகளை, குழந்தை பிறந்த ஆறாவது, ஒன்பதாவது மற்றும் பதின்மூன்றாவது மாதங்களில் அவசியம் போட வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த ஊசிகள் போடப்படுகின்றன.

குழந்தையின் உடலை முற்றிலுமாக மூடும் இறுக்கமான உடைகளை தவிர்க்க வேண்டும். காற்றோட்டமான பருத்தி உடைகள் சிறந்தவை. காலை 7 முதல் 9 மணி வரை புற ஊதாக்கதிர்கள் இல்லாத சூரிய ஒளியில், குழந்தையை சூரிய ஒளிக்குளியல் எடுக்க வைப்பதால், விட்டமின் டி சத்து கிடைக்கும். இப்போது குழந்தைகளை, முதுகில் சுமக்கும் சிந்தெடிக் பேக்குகளில் தூக்கிக் கொண்டு போவது நாகரிகமாகி விட்டது. இது தவறு. சிந்தெடிக் ரப்பர் மற்றும் கடினமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பேக்குகள் குழந்தையின் தோலை உறுத்தும்.

குழந்தைகளுக்கான டயப்பரை ஒருமுறை சிறுநீர், மலம் கழித்த உடனே அகற்றிவிட வேண்டும். இல்லை என்றால் பிறப்புறுப்பு, தொடை இடுக்குகளில் படை, அரிப்பு ஏற்படலாம். தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேல் டயப்பர் பொருத்தியபடியே இருப்பதும் குழந்தைகளின் மென்மையான சருமத்தை பாதிக்கும் என்பதால், சிறிது நேரமாவது காற்றோட்டமாக விடுவது நல்லது. குழந்தைகளுக்கு டால்கம் பவுடர் போடக் கூடாது. ஏனெனில், குழந்தைகளுக்கு வியர்வை துளைகள் திறந்திருக்காது.

இதனால், பவுடர் படியும் மடிப்புப் பகுதிகளில் சரும ஒவ்வாமை, தடிப்பு, அரிப்பு ஏற்படலாம்.இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. முடிந்தவரை பீடிங் பாட்டிலை குழந்தைக்குப் பழக்க வேண்டாம். இதனால், 3 வயதில் டம்ளரில் பால் குடிக்கப் பழக்குவது சிரமமாகிவிடும். குழந்தைக்கு ஒரு வயது நிறைவடையும் வரை, பசும்பாலை தவிர்ப்பது நல்லது. குழந்தையின் கை, கால், உடலில் மஞ்சள் தடவிக் குளிக்க வைப்பதால், மருத்துவ ரீதியாக எந்தக் கெடுதலும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால், அது கண், காது, மூக்கு ஆகிய பகுதிகளில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *