`10 ஆண்டுகள் பயன்படுத்தலாம்!’- பெண்களுக்கு 5000 மென்ஸ்ட்ரூவல் கப்களை இலவசமாக வழங்கியது கேரள அரசு – Tamil VBC

`10 ஆண்டுகள் பயன்படுத்தலாம்!’- பெண்களுக்கு 5000 மென்ஸ்ட்ரூவல் கப்களை இலவசமாக வழங்கியது கேரள அரசு

கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. அப்படிப்பட்ட வெள்ளத்தில் மீட்கப்பட்ட மக்களை முகாமில் தங்க வைத்திருந்த கேரள அரசு, பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு பதிலாக மென்ஸ்ட்ரூவல் கப் வழங்கியது. பெண்களுள் பலரும் அதை பயன்படுத்துவது பயனுள்ளதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கேரள நகராட்சி சார்பாக ஆலப்புழாவிலுள்ள 5000 பெண்களுக்கு இலவசமாக மென்ஸ்ட்ரூவல் கப் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒரு நாளிதழுக்கு நகராட்சி செயலாளர் கொடுத்த பேட்டியில், “பெண்கள் பலருக்கும் மென்ஸ்ட்ரூவல் கப் உதவியாக இருக்கிறது என்பதை கேரள வெள்ள முகாமின் போது தெரிந்துகொண்டோம். அதன் அடிப்படையில் முதலாவதாக ஆலப்புழாவில் 5000 மென்ஸ்ட்ரூவல் கப்களை இலவசமாக வழங்கும் புராஜக்ட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தோம். இந்த புராஜக்ட்டில் எங்களுடன் இணைந்து CSR Initiative of cola India Ltd என்கிற நிறுவனம் பண உதவி அளித்தது” என்றார்.

மேலும், “பெண்கள் பலரும் மாதவிடாய் காலங்களில் பல சிரமங்களுக்கு ஆளாகின்றனர். ஒரு மாதம் நாப்கினுக்காக அவர்கள் செய்யும் செலவு 50 ரூபாய். ஒரு வருடத்திற்கு 600 ரூபாய். பத்து வருடங்களுக்குக் கிட்டத்தட்ட 6000 ரூபாயை நாப்கின் வாங்குவதற்காக மட்டுமே செலவழிக்கிறார்கள். நாப்கினுக்கு பதிலாகப் பயன்படுத்தக் கூடிய இந்த மென்ஸ்ட்ரூவல் கப்பின் விலை ரூபாய் 2,000. நாப்கினை விடவும் இதன் விலை அதிகம்தான். எனினும், பத்து வருடங்களுக்கு நாப்கினுக்காகச் செலவழிக்கக்கூடிய தொகையைவிட இதன் விலை குறைவுதான். ஏனெனில், மென்ஸ்ட்ரூவல் கப்பை ஒரு முறை வாங்கினால் பத்து ஆண்டுகள் வரையில் அதையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

பெண்ணுறுப்பின் வழியாகக் கப்பைச் செலுத்த வேண்டும் என்கிற தயக்கத்தால்தான் பெண்கள் கப்பை பயன்படுத்த முன்வருவதில்லை. சரியான முறைப்படி அதை ஒருமுறை பொருத்திப் பழகிக் கொண்டால், எந்த பயமும் இல்லை. சாதாரண நீரில் நன்றாக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து கொள்ளலாம். பின்னர் சுடுநீரில் கழுவி அடுத்த முறை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், இது பக்கவிளைவுகள் இல்லாதது” என்றார். மேலும், பெண்கள் பலரும் மென்ஸ்ட்ரூவல் கப் பயன்படுத்துவது சுலபமாகவும், செளகர்யமாகவும் இருப்பதாகக் கூறுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *