`மகனின் ஆசையை நிறைவேற்றினார்; கடைசியில்..!’- நாகையில் ஒரு குடும்பத்துக்கு நடந்த சோகம் – Tamil VBC

`மகனின் ஆசையை நிறைவேற்றினார்; கடைசியில்..!’- நாகையில் ஒரு குடும்பத்துக்கு நடந்த சோகம்

மகனுக்கு பள்ளிக் கட்டணம் கட்ட முடியாத விரக்தியிலும், கடன் தொல்லையால் தாங்க முடியாத வேதனையிலும் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்டது நாகையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகை வெளிப்பாளையம் கொட்டிப்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். வயது 45. இவர் நாகையிலுள்ள நகைக் கடையில் நகை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரின் மனைவி லட்சுமி. இவர்களின் ஒரே மகன் ஜெகதீசன் நாகை புதிய கடற்கரைச் சாலையிலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் லட்சுமி வாகன விபத்தில் அடிபட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். மருத்துவச் செலவு, வாடகை வீடு, மகன் படிப்பு, போதிய வருமானமின்மை, இவையாவும் செந்தில்குமாரை நிறைய கடன் வாங்க வைத்துவிட்டது. கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த செந்தில்குமார் வீட்டுக்கு கடன் கொடுத்தவர்கள் கடந்த சில நாள்களாக வந்து சத்தம் போட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே மகன் படிக்கும் பள்ளிக்கூடம் திறந்து ஒரு வாரம் ஆகியும் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத வருத்தமும் பெற்றோருக்கு இருந்திருக்கிறது. இதனால் செந்தில்குமாரும் லட்சுமியும் விபரீத முடிவெடுத்துவிட்டனர். நேற்று காலை எதிர்வீட்டில் மிகமிக அவசர தேவை எனக்கூறி ரூ.1,000 கடன் வாங்கி நாகையிலுள்ள ஜவுளிக் கடையில் போலீஸ் டிரஸ் எடுத்து மகனுக்கு உடுத்தி, அழகு பார்த்துள்ளனர். காரணம்….`நான் படித்து முடித்து சப் – இன்ஸ்பெக்டர் வேலைக்குப்போய் போலீஸ் டிரஸ்ஸில் மிடுக்காக வருவேன்’ என்று அடிக்கடி மகன் கூறுவானாம். எனவே, அவன் ஆசையை நிறைவேற்றிவிட்டு கனத்த இதயத்தோடு அவனுக்குத் தெரியாமல் விஷத்தையும் ஊட்டியிருக்கிறார்கள். அவன் துடிதுடித்து இறப்பதற்குள் கணவனும் மனைவியும் விஷம் அருந்தி பரிதாபமாய் உயிரிழந்திருக்கிறார்கள்.

இதுபற்றி இந்தத் தற்கொலை வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாரிடம் பேசியபோது, “செந்தில்குமாருக்கு சரியான தொழில் இல்லை. போதிய வருமானமில்லை. வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த வழியில்லை. மகனைப் படிக்க வைக்க கட்டணம் செலுத்த முடியவில்லை. இந்த விரக்தியில் தவறான முடிவை எடுத்துவிட்டனர். “எங்கள் இறப்புக்குப் பணம் கிடைக்கும். அதைக் கடன் கொடுத்தவர்களுக்கு திருப்பித் தரும்படி கடிதம் ஒன்றையும் செந்தில்குமார் எழுதிவைத்துள்ளார். இறக்கும்போதும் அரசாங்கம் பண உதவி செய்யும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களுக்கு இருந்திருக்கிறது. வாழ்க்கையில் கஷ்டம் வரும்போதுதான் அதை எதிர்த்து வெற்றி பெறும் மனவலிமை வேண்டும். வாழவேண்டிய பிஞ்சுக்கும் நஞ்சு கொடுத்து கொன்றிருக்கிறார்கள். இது ஒரு சமுதாய அவலம். இத்தகைய முடிவு மிகவும் வருத்தத்தைத் தருகிறது” என்றார்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *