மழை வந்தாச்சு.. நியூசிலாந்துக்கு யோகம்.. இந்தியா கதை கந்தல்.. ஏன் தெரியுமா? – Tamil VBC

மழை வந்தாச்சு.. நியூசிலாந்துக்கு யோகம்.. இந்தியா கதை கந்தல்.. ஏன் தெரியுமா?

நாட்டிங்ஹாம் : இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் துவக்கத்திலேயே மழை பெய்யத் துவங்கியுள்ளது.

போட்டியில் மழை குறுக்கிட்டதால், போட்டியின் முடிவு இந்திய அணியை விட நியூசிலாந்து அணிக்கே சாதகமாக அமையும்.

அதற்கு முக்கிய காரணம் போட்டி நடைபெறும் நாட்டிங்ஹாம் நகரின், ட்ரென்ட் பிரிட்ஜ் மைதாம் தான்.

பவுண்டரி எல்லை
ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில், இந்தியா – நியூசிலாந்து போட்டிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பிட்ச்சின் ஒரு பக்கம் பவுண்டரி 68 மீட்டர் தூரத்திலும், மறுபக்கம் பவுண்டரி 74 மீட்டரிலும் உள்ளது. அதாவது, பவுண்டரி எல்லையின் தூரம் குறைவாக இருக்கும் பகுதியில் ஃபோர், சிக்ஸ் அடிப்பது எளிது.

அவுட் பீல்ட் பிரச்சனை
இதோடு மழையும் சேர்ந்து கொண்டால், ஆடுகளத்தின் அவுட் பீல்ட் ஈரப்பதமாக இருக்கும். அப்போது பீல்டிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். பீல்டிங் செய்யும் வீரர்கள் வழுக்கி விழவும் அதிக வாய்ப்பு உள்ளது.

சிக்கல்
சரி, இது இந்தியா – நியூசிலாந்து இரண்டு அணிகளுக்குமே தானே சாதகம்? ஆம். இரண்டு அணிகளுமே இதை பயன்படுத்தலாம். ஆனால், இந்தியாவிற்கு ஒரு சிக்கல் உள்ளது. மழை பெய்தால் பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சுத்தமாக ஒத்துழைக்காது.

அதிரடி
அதிரடிக்கு பெயர் போன நியூசிலாந்து பேட்டிங் வரிசை சிக்ஸர், ஃபோர் என அடித்து இந்திய சுழற் பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ், சாஹல் ஓவர்களை தெறிக்கவிடுவார்கள். நியூசிலாந்து அணி எப்படியும் ஒரு முழு நேர சுழற் பந்துவீச்சாளரை மட்டுமே பயன்படுத்தும். அதனால், அந்த அணிக்கு பெரிய சிக்கல் இல்லை.

என்ன திட்டம்?
இதை சரி கட்ட இந்திய அணி தன் திட்டங்களை மாற்றி, மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை களமிறக்க வேண்டும். இதுவரை இரண்டு உலகக்கோப்பை லீக் போட்டிகளில் புவனேஸ்வர் குமார், பும்ரா மட்டுமே வேகப் பந்துவீச்சை கவனித்து வந்த நிலையில், இந்தப் போட்டியில் ஷமியும் களமிறக்கப் பட வேண்டும்.

தடை யாருக்கு சாதகம்?
ஒருவேளை மழையால் போட்டி கைவிடப்பட்டால், அது நியூசிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும். காரணம், அந்த அணி ஏற்கனவே, 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வலுவான இந்திய அணிக்கு எதிரான போட்டியில், விளையாடி தோல்வி அடைந்தால் இரண்டு புள்ளிகளை இழக்க நேரிடும்.

அரையிறுதி
அதே சமயம், போட்டி நடக்காவிட்டால் ஒரு புள்ளி கிடைக்கும். அடுத்து இரண்டு வெற்றிகள் மட்டும் பெற்றாலே நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறி விடும். ஆனால், இந்திய அணி இந்தப் போட்டியில் ஒரு புள்ளி மட்டும் பெற்றாலும், இன்னும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில் தான் இருக்கும்.

பதற்றம் ஏற்படும்
ஒருவேளை நியூசிலாந்து போட்டியில் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்று விட்டால், இந்திய அணிக்கு அது பெரிய பலமாக அமையும். மனதளவில் இந்தியா நம்பிக்கையுடன் அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்ளும். மற்ற அணிகளும் இந்திய அணிக்கு எதிராக ஆடும் போது பதற்றத்துடன் ஆடுவார்கள்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *