சர்ச்சைப் பேச்சு.. பாயும் வழக்குகள்.. கைதுக்கு பயந்து முன்ஜாமீன் கோரி இயக்குநர் பா.ரஞ்சித் மனு! – Tamil VBC

சர்ச்சைப் பேச்சு.. பாயும் வழக்குகள்.. கைதுக்கு பயந்து முன்ஜாமீன் கோரி இயக்குநர் பா.ரஞ்சித் மனு!

மதுரை: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சனையில் சிக்கி வருகிறார். மேடைக்கு மேடை சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் அவர் பேசி வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சோழ மன்னர் ராஜ ராஜ சோழ தரக்குறைவாக விமர்சித்தார்.

ராஜராஜ சோழன் அயோக்கியன்
கட்டிடக்கலையால் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த ராஜ ராஜ சோழனை வார்த்தைக்கு வார்த்தை அவன், இவன் என்றும் கடுமையாக பேசினார் ரஞ்சித். ஒரு கட்டத்தில் ராஜ ராஜ சோழன் ஒரு அயோக்கியன் என்றும் கூறினார்.

நிலம் பறிப்பு
மேலும் ராஜ ராஜ சோழனின் ஆட்சி இருண்டகாலம் என்றும் அவரது காலத்தில்தான் தலித் மக்களின் நிலம் அத்தனையும் பறிக்கப்பட்டு கோட்டைக் கட்டப்பட்டது என்றும் அவர் கூறினார். தலித்களை அடிமையாக வைத்திருந்தது ராஜ ராஜ சோழன்தான் என்றும் சாடினார் ரஞ்சித்.

தேவதாசி முறை
அதுமட்டுமின்றி ராஜ ராஜ சோழன் 400 பெண்களை விலை மாதர்களாக வைத்திருந்ததாகவும் பெண்களை தேவதாசிகளாக மாற்றியதும் ராஜ ராஜ சோழன்தான் என்றும், கோலார் தங்க வயலுக்கு பெண்களை விற்றதும் ராஜ ராஜ சோழன்தான் என்றும் கடுமையாக விமர்சித்தார் பா.ரஞ்சித்.

கடவுளையே சாப்பிடுபவன்
மேலும் தான் ஒரு ஜாதி வெறியன் என்றும் அறிவித்துக்கொண்ட பா.ரஞ்சித், மாட்டை நீங்கள் கடவுளாக கும்பிட்டால், அந்த கடவுளையே சாப்பிடுபவன் நான் என்றும் காரசாரமாக பேசினார் இயக்குநர் ரஞ்சித். அவரது பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

போலீஸில் புகார்
அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ரஞ்சித் மீது போலீஸில் புகார் அளித்தனர். முக்குலத்தோர் புலிப்படை சார்பிலும் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறையிலும் வழக்கு
ராஜராஜ சோழனை விமர்சித்த இயக்குநர் பா. ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பனந்தாள் இன்ஸ்பெக்டர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை காவல்நிலையத்திலும் பா ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முன்ஜாமீன் கேட்கும் பா ரஞ்சித்
இயக்குநர் ரஞ்சித் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு இயக்குநர் ரஞ்சித் மனுத்தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி ரஞ்சித் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பேசியது வரலாற்று உண்மை
அந்த மனுவில் சாதிக்கலவரத்தை தூண்டும் வகையில் தான் பேச வில்லை என்றும் ஏற்கனவே பல்வேறு தலைவர்கள் இதுபோன்று பேசியிருப்பதாகவும் புத்தகங்களாக வெளியிட்டிருப்பதாகவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ராஜராஜ சோழன் குறித்த வரலாற்று உண்மைகளை மட்டுமே பேசியுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

மோதலை தூண்டவில்லை
தனக்கு முன்பே பலரும் ராஜராஜ சோழன் குறித்து பேசியிருப்பதாகவும் கூறியுள்ளார். தான் ஜாதி மோதலை தூண்டும் வகையில் தான் பேசவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்கு முன்பு பேசியவர்கள் குறித்த விவரங்களையும் ரஞ்சித் தனது மனுவுடன் அபிடவிட்டாக தாக்கல் செய்துள்ளார்.

கைதுக்கு பயந்து மனு
கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக இயக்குநர் பா ரஞ்சித் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *