இராமரின் உயிரை காப்பாற்ற தன் மகனுடனேயே சண்டையிட்ட அனுமன் – Tamil VBC

இராமரின் உயிரை காப்பாற்ற தன் மகனுடனேயே சண்டையிட்ட அனுமன்

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் ராமர் எவ்வாறு இராவணனை வீழ்த்தி சீதையை காப்பாற்றி அதர்மத்தை அழித்தார் என்பதை கூறும் காவியம் ஆகும். இராமாயணத்தில் நாம் அறியாத பல விஷயங்கள் உள்ளது, அதில் ஒன்றுதான் இராவணனின் சகோதரன் அஹிராவன். நமக்கு தெரிந்ததெல்லாம் இராவணனின் சகோதரர்கள் கும்பகர்ணன் மற்றும் விபீஷணனை பற்றித்தான்.

அஹிராவன் கிட்டதட்ட இராவணனின் பலத்திற்கு இணையானவன், ஆனால் அவர்களுக்குள் இருந்த பகையால் அவன் போரில் இராவணனுக்கு உதவவில்லை. இருப்பினும் அவன் மறைமுகமாக இராவணனுக்கு உதவி செய்தான். அஹிராவன் இராமரையும், இலட்சுமணனையும் அழிக்க தீட்டிய திட்டம் பற்றியும், அனுமன் எப்படி அவர்களை காப்பாற்றினார் என்பதையும் இங்கு பார்க்கலாம்.

அஹிராவன்
அஹிராவனை பற்றி நாம் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இராவணன் விண்ணுலகத்தையும், பூமியையும் ஆண்டது போல அஹிராவன் பாதாள உலகத்தை ஆண்டான். இராவணன் மீது அதிக அன்பு வைத்திருந்தாலும் சீதைக்காக இராமாயண போர் நடைபெறுவதால் அதில் பங்கேற்க அஹிராவன் விரும்பவில்லை. இராவணன் எப்படி சிவபெருமானின் தீவிர பக்தரோ அதேபோல அஹிராவன் மகாமாயாவின் தீவிர பக்தராக இருந்தார்.

இராமாயண போர்
இராமாயண போர் உச்சத்தில் இருந்த சமயம் இராவணனின் புறத்தில் சேதங்கள் அதிகமாக இருந்தது. அனைத்திற்கும் மேலாக இராவணனின் அன்பு புதல்வனான இந்திரஜித் இலட்சுமணன் கையால் கொள்ளப்பட்டது இராவணனை நிலைகுலைய செய்தது. எனவே இராமன் மற்றும் இலட்சுமணனை வதைக்க அஹிராவனின் உதவியை கேட்க எண்ணினார்.

இராவணனின் தந்திரம்
அஹிராவன் தனக்கு உதவி செய்யமாட்டான் என்பதை இராவணன் நன்கு அறிவார். எனவே ஒரு தந்திரத்தின் மூலம் அஹிராவனை வைத்து இராமனை வதைக்க எண்ணினார். அதன்படி அஹிராவன் மகாமாயாவின் தீவிர பக்தன் என்பது தெரிந்த இராவணன், இராமன் மற்றும் இலட்சுமணனை பலி கொடுப்பது மகாமாயாவின் மனதை குளிர்விக்கும் என்று அஹிராவனிடம் தெரிவித்தார். அஹிராவனுக்கும் இந்த யோசனை சரியாக பட்டது.

மாயக்கோட்டை
அஹிராவனின் திட்டத்தை விபீஷணன் அறிந்தார். இராமர் மற்றும் இலட்சுமணை காப்பாற்ற முகாமில் இருந்த அனைவரையும் எச்சரிக்கை செய்தார். இராமர் மற்றும் இலட்சுமணனை பாதுகாக்க தன் வால் கொண்டு அவர்களின் படுக்கையை சுற்றி ஒரு கோட்டையை எழுப்பினார். இதனை அறிந்த அஹிராவன் விபீஷணனின் உருவம் கொண்டு முகாமிற்கு வந்தான். இதனை அறியாத அனுமனும் அஹிராவனை அந்த மாயகோட்டைக்குள் அனுமதித்தார்.

அஹிராவனின் மந்திரம்
கோட்டைக்குள் நுழைந்த அஹிராவன் உறங்கி கொண்டிருந்த இராமன் மற்றும் இலட்சுமணனை தன் மந்திர சக்தியால் அவர்களை சிறிய பூச்சியாக மாற்றி தான் கொண்டு வந்திருந்த சிறிய மந்திர பெட்டிக்குள் அவர்களை அடைத்து விட்டு அங்கிருந்து மறைந்தான்.

அனுமனின் சபதம்
இராமரும், இலட்சுமணனும் அஹிராவனனால் கடத்தப்பட்ட செய்தி அறிந்த அனுமன் உடனடியாக அவர்களை காப்பாற்ற நடவடிக்கையில் இறங்கினார். அவர்களை காப்பாற்றவில்லை எனில் தானும் இறப்பதாக சபதம் எடுத்தார். அவர்களை காப்பாற்ற உடனடியாக பாதாள உலகம் நோக்கி விரைந்தார். வழியில் அவர் மஹாரத்வஜாவை சந்தித்தார், மஹாரத்வஜா குரங்கு மற்றும் மீன் சேர்ந்த உருவமாவர்.

மகனுடன் போர் புரிந்த அனுமன்
அனுமனை எதிர்த்த மஹாரத்வஜா யாரெனில் அனுமன் இலங்கை நோக்கி பறந்தபோது அனுமனின் வியர்வை மீனின் கருப்பையில் விழுந்ததால் உருவானவர். சொல்லப்போனால் மஹாரத்வஜா அனுமனின் மகன்தான். அவனை பாதாள உலகத்தின் பாதுகாவலனாக நியமித்திருந்தான் அஹிராவன், அதனால் இப்போது தன் மகனுடன் போர் புரியும் நிலைக்கு தள்ளப்பட்டார் அனுமன். நொடிப்பொழுதில் தன் மகனை தோற்கடித்துவிட்டு பாதாள உலகத்திற்குள் நுழைந்தார் அனுமன்.

அஹிராவனனுடன் போர்
பாதாள உலகத்தில் இராமர் மற்றும் இலட்சுமணை பலி கொடுக்க அனைத்தும் தயாராக இருந்தது. அனுமன் தன் உருவத்தை சிறியதாக மாற்றி பூவில் ஒளிந்து கொண்டு பலிகொடுக்கும் அறைக்குள் நுழைந்தார். அனுமனை கண்டவுடன் அஹிராவன் மாபெரும் உருவத்தை எடுத்தான், அஹிராவனை வீழ்த்துவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இராவணனுக்கு இணையான அஹிராவனை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்லவாயிற்றே.

அஹிராவனின் உயிர் ரகசியம்
எவ்வளவு முயன்றும் அனுமனால் அஹிராவனனை வீழ்த்த இயலவில்லை. சித்திரசேனன் அஹிராவனின் உயிர் ரகசியத்தை அனுமனிடம் கூறினார். அதன்படி உலகின் ஐந்து மூலைகளில் ரகசிய குகைகளில் இருக்கும் விளக்குகளை ஒரே நேரத்தில் அணைத்தால் மட்டுமே அஹிராவனை வதைக்க இயலும் என்று கூறினான்.

பஞ்சமுக அனுமன்
அஹிராவனின் உயிர் ரகசியத்தை அறிந்த அனுமன் நரசிம்ம, கருட, வராக மற்றும் ஹயக்ரீவ உருவம் இணைந்த பஞ்சமுக அனுமன் உருவத்தை எடுத்து ஐந்து திசைகளுக்கும் விரைந்தார். இந்த உருவத்தின் மூலம் அனுமன் அந்த ஐந்து விளக்குகளையும் ஒரே நேரத்தில் அனைத்து அஹிராவனின் முடிவுக்கு வழிவகுத்தார். அஹிராவன் இறந்த பிறகு இராமரும், இலட்சுமணனும் அவர்களின் பழைய உருவத்திற்கு மாறினர். அதன்பின் அவர்கள் தங்கள் முகாமிற்கு திரும்பி போரை தொடர்ந்து போரிட்டனர்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *