தர்ஜினியின் சிறப்பான ஆட்டத்தினால் சிங்கப்பூரையும் அச்சுறுத்திய இலங்கை வலைப்பந்து அணி! – Tamil VBC

தர்ஜினியின் சிறப்பான ஆட்டத்தினால் சிங்கப்பூரையும் அச்சுறுத்திய இலங்கை வலைப்பந்து அணி!

தர்ஜினி சிவலிங்கத்தின் அபார ஆட்டத்துடன் இலங்கை வலைப்பந்து அணி, 11 ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் கிண்ணப் பிரிவு (Cup Category) முதல் போட்டியில் சிங்கப்பூர் வலைப்பந்து அணியினை 74-61 என்கிற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து வெற்றிகரமாக முன்னேறுகின்றது.

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் குழு நிலைப் போட்டிகளில் சைனீஸ் தாய்ப்பே அணியினை 137-5 என்கிற புள்ளிகள் அடிப்படையில் தோற்கடித்த இலங்கை வலைப்பந்து அணி, அதன் பின்னர் இந்தியாவை 101-29 என்கிற புள்ளிகள் அடிப்படையில் துவம்சம் செய்து மிகவும் வெற்றிகரமான ஒரு ஆரம்பத்தை காட்டியிருந்தது.

இப்படியான ஒரு ஆரம்பத்தை காட்டிய இலங்கையின் வலைப்பந்து அணிக்கு ஆசியாவின் ஜாம்பவான் சிங்கப்பூர் வலைப்பந்து அணியுடனான ஆட்டம் அணியுடனான ஆட்டம் மிகவும் சவலாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் விடயங்கள் எதிர்பார்த்தது போன்று சிங்கப்பூருக்கு சாதகமாக அமையவில்லை.

சிங்கப்பூரின் OCBC அரங்கில் ஆரம்பான போட்டியில் சிங்கப்பூர் வலைப்பந்து அணி முதல் நிமிடங்களில் 7-4 என்கிற முன்னிலையில் காணப்பட்ட போதிலும், இலங்கை வலைப்பந்து அணிக்காக புள்ளி வேட்டையில் ஈடுபட்ட தர்ஜினியின் திறமையான ஆட்டத்தினால் முதல் கால் பகுதி இலங்கைக்கு 18-12 என்கிற புள்ளிகள் கணக்கில் சொந்தமாகியது.

இரண்டாம் கால் பகுதியிலும் முதல் கால் பகுதியினை கைப்பற்றிய உற்சாகத்தில் இலங்கை வலைப்பந்து அணி 28-18 என்கிற புள்ளிகள் அடிப்படையில் தமது முன்னிலையினை நீடித்தது. இந்த கால் பகுதியில் ஹாசித மென்டிஸ் பரிமாறிய பந்துகளின் மூலம் தர்ஜினி சிவலிங்கம் புள்ளிகள் மழை பொழிந்தார்.

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சாதனை வெற்றி

எனினும், தமது கோல் காப்பாளராக செயற்பட்ட சென் லிலியினை சிந்து நாயர் மூலம் பிரதியீடு செய்த சிங்கப்பூர் வலைப்பந்து அணி பதில் தாக்குதல் நடாத்தியது. இதனால் இலங்கை இராண்டாம் கால் பாகுதியில் பெற்ற புள்ளிகளுக்கு (19) கிட்டவாக சிங்கப்பூர் வலைப்பந்து அணியின் புள்ளிகள் (16) இருந்த போதிலும் போட்டியின் முதல் பாதி 37-28 என்கிற புள்ளிகள் அடிப்படையில் முடிந்தது.

முதல் பாதி – இலங்கை 37 – 28 சிங்கப்பூர்

சிங்கப்பூர் வலைப்பந்து அணிக்கு மூன்றாம் கால் பகுதி அவர்கள் எதிர்பார்த்தது போன்று அமையவில்லை. சிங்கப்பூர் வலைப்பந்து அணி தமது வீராங்கனைகளில் சில மாற்றங்களையும் செய்து முயற்சித்தது எனினும், அவை எதுவும் கைகூடமால் போன நிலையில் மூன்றாம் கால் பகுதியும் இலங்கை வலைப்பந்து அணியின் ஆதிக்கத்துடன் 58-42 என்கிற புள்ளிகள் கணக்கில் முடிந்தது.

போட்டியின் நான்காவதும் இறுதியுமான கால் பகுதியினை சிங்கப்பூர் 19-16 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றி ஆதிக்கத்தை காட்டிய போதிலும், இலங்கை வலைப்பந்து அணிக்கு முன்னர் இடம்பெற்ற கால் பகுதிகளில் கிடைத்த புள்ளிகள் ஆட்டத்தில் வெற்றி பெற போதுமாக அமைந்தது.

முழு நேரம் – இலங்கை 74 – 61 சிங்கப்பூர்

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *